http://emathueelam.blogspot.in/2013/04/ipl-season-6-2013.html

Tuesday, April 2, 2013

ஐபிஎல் தொடர்கள் இதுவரை வரை... மலிங்காவின் 83 விக்கெட்டுகள்! யூசுப் பதானின் 37 பந்தில் சதம்!!

சென்னை: கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக கடந்த 5 ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வங்களைவிட பல நாட்டு வீரர்கள் இணைந்து ஒரு அணியில் விளையாடும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகமாகின. ஏலம் முறையில் அணிகளுக்கு எடுக்கப்பட்ட வெளிநாடு மற்றும் உள்ளூர் முன்னணி வீரர்களின் அதிரடி ஆட்டங்களுடன் இடைஇடையே ஈர்க்கும் நடனங்களும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.நாளை முதல் போட்டி தொடங்குகிறது. நாளை முதல் மே 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நாட்டின் முக்கிய 12 நகரங்களில் நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட ஒரு சில சாதனைகளின் பட்டியல்

அதிக ரன்குவித்த ரெய்னா

ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2254 ரன்கள் எடுத்திருக்கிறார்.

காம்பீருக்கு 2-வது இடம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர் 2065 ரன்கள் குவித்து 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஐபிஎல் அணி கேப்டன்களில் அதிக ரன்களைக் குவித்தவரும் காம்பீரே.

டெண்டுல்கர் 3வது இடம்

ஐபிஎல் தொடர்களில் இந்திய அணியின் உச்சநட்சத்திரமாக கொண்டாடப்படும் சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். சச்சின் 64 போட்டிகளில் விளையாடி 2047 ரன்களைக் குவித்து 3வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவருக்குப் பின்னால் ரோகித் சர்மா (1975 ரன்கள்), காலிஸ் 1965 ரன்களை எடுத்திருக்கின்றனர்.

மலிங்காவுக்கு முதலிடம்

ஐபிஎல் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை மலிங்காவுக்கு உண்டு. அவர் 83 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் அமித் மிஸ்ராவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆர்.பி.சிங்கும் தலா 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

சூப்பர் சதம் -யூசுப் பதான்

2010-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யூசுப் பதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் அதிரடியாக சதமடித்து சாதனை நிகழ்த்தினார். ஆனால் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

சதங்கள்

ஐபிஎல் தொடர்களில் 24 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 15 சதங்கள் இந்திய வீரர்களால் அடிக்கப்பட்டவை..அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். அவர் 32 சதங்களை அடித்திருக்கிறார். டெல்லி டேர்டெவில்ஸின் வார்னர் 2, சென்னை சூப்பர்கிங்ஸின் முரளி விஜய் 2 சதங்களை அடித்திருக்கின்றனர்

அதிக ரன்கள்-

மெக்குலம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மெக்குலம்தான் அதிகபட்ச ரன்களைஅடித்தவர். அவர் 2008-ம் ஆண்டு 158 ரன்களை அடித்திருந்தார். ஐபிஎல் போட்டிகளில் தனிநபர் ஒருவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அவருக்குப் பின்னால் 2012-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கெயில்128 ரன்களை அடித்து 2-வது அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 3-வது இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய் பெற்றிருக்கிறார். 2010- ம் ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 127ரன்களை எடுத்திருக்கிறார்.


சென்னை கேப்டன் டோணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 78 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. அவர் அடித்த ரன்கள் 1783 ரன்கள்.

 

Copyright @ 2013 எமது ஈழம் .